ஜப்பானில் படிக்க ஸ்காலர்ஷிப்!

ஜப்பானில் நல்ல உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பல பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. ஜப்பான் பல்கலைக்கழகங்களில் படிக்க, வெளிநாட்டு மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்குகிறது ஜப்பானியக் கல்வி, கலாசாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம். இந்த உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 50 இந்திய மாணவர்கள் தற்போது ஜப்பானில் படித்து வருகிறார்கள்.


எந்தப் படிப்புகளைப் படிக்க இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது?


பர்சனல் கேர் அண்ட் நியூட்ரிஷன், எஜுக்கேஷன் அண்ட் வெல்பேர், பிசினஸ், ஃபேஷன் அண்ட் ஹோம் எகனாமிக்ஸ், கல்ச்சர் அண்ட் ஜெனரல் எஜுக்கேஷன் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் மூன்று ஆண்டு இளநிலைப் பட்டப் படிப்புகளைப் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டிலிருந்து மூன்று ஆண்டு தொழில்நுட்பப் படிப்புகளில் சேர உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க முடியாது.

மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்பர்மேஷன் கம்யூனிக்கேஷன் அண்ட் நெட் ஒர்க் என்ஜினீயரிங், மெட்டீரியல்ஸ் என்ஜினீயரிங், ஆர்க்கிடெக்ச்சர் அண்ட்  சிவில் என்ஜினீயரிங், மேரிடைம் என்ஜினீயரிங் போன்ற நான்கு ஆண்டு தொழில்நுட்பப் பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

சட்டம், அரசியல், கற்பித்தல், சமூகவியல், இலக்கியம், வரலாறு, ஜப்பானிய மொழி, பொருளாதாரம், பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் ஸ்டடீஸ், மெக்கானிக்கல் ஸ்டடீஸ், சிவில் என்ஜினீயரிங் அண்ட் ஆர்க்கிடெக்ச்சர், கெமிக்கல் ஸ்டடீஸ், அக்ரிகல்ச்சுரல் ஸ்டடீஸ், ஹைஜெனிக் ஸ்டடீஸ், மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய பாடப்பிரிவுகளில் ஐந்து ஆண்டு இளநிலைப் பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களும் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.

இந்த உதவித்தொகையைப்பெற யார் விண்ணப்பிக்கலாம்?

ஜப்பானில் கல்வி உதவித் தொகையுடன் படிக்க விரும்பும் மாணவர்கள், 1992-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதிக்குப் பிறகும் 1997-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதிக்கு முன்னதாகவும் பிறந்திருக்க வேண்டும். பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு ஐப்பானிய மொழியை கற்றுக் கொள்வதற்கு ஆர்வமுடையவராக இருக்க வேண்டும். அதன்பிறகு, ஜப்பானியக் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் படிக்கச் சேர்க்கப்படுவர். ஏற்கெனவே ஜப்பானிய மொழியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உரிய தகுதி இருந்தால், ஜப்பானிய மொழியைப் படிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு நேரடியாகப் படிப்பில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

விதிமுறைகளுடன் கூடிய விண்ணப்பப் படிவங்கள், ஜப்பானிய தூதரக வளாகம் (கலாசாரம் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை), 12-1 செனடாப் சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600018 என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். இணைய தளத்திலிருந்தும் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 21-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் மாணவரின் புகைப்படம், 10, 11, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள். கடைசியாகப் படித்த பள்ளி முதல்வரிடமிருந்து பரிந்துரைக் கடிதம், மருத்துவச் சான்றிதழ் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டியதிருக்கும். இந்தக் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதி, விண்ணப்பிக்க வேண்டிய நடைமுறை குறித்த முழு விவரங்களும் ஜப்பானியக் கல்வி குறித்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

எப்படித் தேர்வு செய்யப்படுவார்கள்?

இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள், சென்னையில் உள்ள ஐப்பான்  தூதரக வளாகத்தில் நடைபெற இருக்கும் எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். இத்தேர்வு குறித்த விவரங்கள், விண்ணப்பிக்கும் மாணவர்களுக்குத் தனியே தெரிவிக்கப்படும். இந்தத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு ஜப்பானிய மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியல் ஜப்பானிய கல்வி, கலாசார, விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பட்டியல் இறுதி செய்யப்படும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் ஏப்ரல் மாதத்தில் ஜப்பானில் படிக்கத் தயாராக வேண்டும்.

தேர்வு செய்யப்படும் மாணவர்கள் ஜப்பானில் படிக்க எந்தச் செலவையும் செய்ய வேண்டியதில்லை. படிப்புக் கட்டணம், தங்குமிடம், உணவு, புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்துப் படிப்புச் செலவுகளுக்கும் ஜப்பான் அரசு கல்வி உதவித்தொகையை வழங்கி விடுகிறது. சொந்த நாட்டிலிருநது ஜப்பானுக்குப் படிக்கச் செல்வதற்கு விமானக் கட்டணமும் வழங்கப்படும். இந்தக் கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்கள், வேறு எந்தக் கல்வி உதவித்தொகையையும் பெற முடியாது. ஜப்பானியப் பல்கலைக்கழகத்தில் சொந்தப் பணத்தில் ஏற்கெனவே படித்து வரும் மாணவர்களும் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க முடியாது. ஜப்பானிய மொழியைக் கற்பது உள்ளிட்ட ஓராண்டு தயாரிப்புக் காலம் உள்பட அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தப் படிப்பை முடிக்கும் வரை உதவித் தொகை வழங்கப்படும். இந்தப் படிப்பைச் சிறப்பாக முடிக்கும் மாணவர்களுக்கு ஜப்பானிலேயே முதுநிலைப் பட்டப் படிப்பைப் படிக்கவும் கல்வி உதவித் தொகை கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உளளன. இந்தக் கல்வி உதவித்தொகை பெறத் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் ஜப்பானிய மொழி, ஜப்பானைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள், ஜப்பானில் உள்ள சட்ட நடைமுறைகள், ஜப்பானிய கலாசாரம் போன்றவற்றைத் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

விவரங்களுக்கு: 044-24323860, இணையதளம்: www.studyjapan.go.jp/en/