
பல நேரங்களில் பிள்ளையை அம்மா கோமளவல்லியால் கண்டுபிடிக்க முடியாது. கோயிலில் சாக்பீஸ் கொண்டு வரைந்து கணக்கு போட்டுவிட்டு அதற்கான விடைகளை கனவில் தேடிய அற்புதம் அவர். பூஜ்யத்துக்கு மதிப்பு இல்லை என ஆசிரியர் வகுப்பில் சொன்னார். பூஜ்யத்தை ஒரு எண்ணுக்கு பின்னாடி போட்டால் மதிப்பு வருகிறதே என கேட்டபொழுது அவருக்கு வயது பத்துக்குள்.
ராமானுஜனுக்கு கணிதத்தின் மீது ஈடில்லா ஆர்வம் வருவதற்கு ஓர் எளிய சம்பவம் காரணம். அவரின் நண்பன் சாரங்கபாணி 45-க்கு 43 வாங்கியிருந்தார். இவர் ஒரு மதிப்பெண் குறைவாக வாங்கி இருந்தார். அதனால் அவருடன் பேசுவதை நிறுத்திக்கொண்டு கணிதத்தில் கல்லூரி மாணவர்கள் படிக்கும் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார். லோனியின் மட்ட திரிகோணவியல் ஒரு நூல். இன்னொன்று காரின் சினாப்சிஸ். அதில், கல்லூரி மாணவர்கள் மனப்பாடம் செய்துகொள்ள வேண்டிய அல்லது ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய சூத்திரங்கள், தேற்றங்களை குறிப்பிட்டு இருக்கும். எப்படி வந்தது என விளக்கம் இருக்காது. அதைப்படித்துதான் ராமானுஜன் தன் கணித தாகத்தை தணித்துக்கொண்டார். அவரே அது எப்படி வந்தது என கண்டறிந்தார். பேப்பர் வாங்க காசில்லாததால் ஸ்லேட்டில் கணக்குகளை போட்டு பார்த்துவிட்டு முடிவுகளை மட்டும் நோட் புக்கில் எழுதினார். கும்பகோணம் அரசு கல்லூரியில் மூன்று முறை முயன்றும் ஆங்கிலத்தில் தேற முடியாமல் பட்டம் வாங்க முடியாமல், பச்சையப்பா கல்லூரி போனார்.
அங்கே சிங்கார முதலியாரின் அறிமுகம் கிடைத்தது. இவரின் சூத்திரங்கள் அவரை கவர்ந்தன. எண்ணற்ற நூல்களைப் படித்தார். சென்னை துறைமுகத்தில் எழுத்தராக சேர்ந்தார். இந்தியாவில் வந்த கணித இதழில் எண்ணற்ற கணக்குகளை வெளியிட்டு கொண்டிருந்த இந்திய கணிதக் குழுவை நிர்மாணித்த வி.ராமசுவாமி ஐயர் கண்ணில் இவரின் கணக்குகள் பட்டன. கூடவே, கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்ற துறைமுக தலைவர் சர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங் கண்ணில் பட்டது. அவர் கிண்டி பொறியியல் கல்லூரி பேராசிரியர்களிடம் அறிமுகம் தந்தார். அவர்கள் இவரை கேம்ப்ரிட்ஜ் பல்கலை.க்கு கடிதம் எழுத சொன்னார்கள்.
எண்ணற்ற நபர்களுக்கு இவரின் சூத்திரங்கள் போய் சென்றன. பலர் குப்பையில் போட்டார்கள். காட்பிரே ஹரால்ட் ஹார்டிக்கு கடிதம் போனது. அதில் இருந்த வரிகள் இவை... ''எனக்குத் தேவை என்பதெல்லாம் ஒரே ஒரு வேளை உணவுதான். எனக்கு அதுவும் கிடைப்பது மிக அரிதாக இருக்கிறது. ஆகவே, தாங்கள் எனது கணித முயற்சிகளைப் பிறர் அறிய எழுதினால் நல்லது. ஏனெனில், என் நிலைமையை அறிந்து பல்கலைக்கழகமோ அல்லது அரசோ ஏதேனும் உதவிசெய்ய முன்வரக் கூடும். இதனால் எனது வறுமை சற்று நீங்குவதுடன், கணித ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்ய உற்சாகம் ஏற்படும்."
ஜனவரி 16, 1913-இல் அக்கடிதம் ஹார்டியின் கைக்கு போனது; எதோ கிறுக்கல் என நினைத்து முதலில் எடுத்து வைத்த ஹார்டி, அதை இரவு படிக்கும்பொழுது மெய்சிலிர்த்து போனார். இரவெல்லாம் தூக்கத்தை தொலைத்து ஒரு இணையற்ற கணித மேதையை கண்டுவிட்டதற்கு பூரித்தார். உடனே ராமானுஜத்தை கேம்பிரிட்ஜ் வரும்படிக் கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார்.
அங்கே ஓயாமல் பல்வேறு எண் கோட்பாடுகளில், செறிவெண் சார்ந்தும் அவரின் ஆய்வுகள் பிரமிப்பானவை; அவரின் தேற்றங்கள் கண்டுபிடிப்புகள் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம்பெறும் அளவுக்கு எளிமையானவை இல்லை. அவரின் பல கணித தேற்றங்கள் இன்றைக்கு Computer Algorithmsல் பயன்பட்டு சிக்கலான கணிதச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன. எண் கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறியவை இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தபபட்டு வருகின்றன.
அத்தோடு அவரின் எல்லையற்ற திறமையை கண்டு வியந்து அவருக்கு இன்றைய முனைவர் பட்டத்துக்கு இணையான பட்டத்தை ட்ரினிட்டி கல்லூரி வழங்கியது. ராயல் சொஸைட்டியில் அவரை பெல்லோவாக சேர்த்துக்கொண்டார்கள். ராமானுஜத்தை தொடர்ந்து கொண்டாடிய ஹார்டியின் வரிகளில்... "எனக்கு 25 மதிப்பெண்ணும், தலைசிறந்த ஜெர்மன் கணித வல்லுநர் டேவிட் ஹில்பெர்ட்டுக்கு 80 மதிப்பெண்ணும், சந்தேகமே இல்லாமல் ராமானுஜனுக்கு 100 மதிப்பெண்ணும் வழங்குவேன்" என்றார்.
அவரின் பல்வேறு படைப்புகள் பல நோட் புத்தகங்களில் இருந்தன. அவற்றை கண்டுபிடித்து எடிட் செய்யும் வேலையை ஜார்ஜ் ஆண்டிரூஸ், புரூஸ் பெர்ண்ட் எனும் இரண்டு அறிஞர்கள் செய்து வருகிறார்கள். ப்ரூஸ் பெர்ண்ட் என்ன சொல்கிறார் என்றால், "கிட்டத்தட்ட இரண்டாயிரம் முடிவுகளை இதுவரை அவரின் நோட்களில் கண்டு இருக்கிறோம் .இதில் தொன்னூறு சதவிகிதம் துல்லியமாக இருக்கிறது. இவ்வளவு வெற்றி விகிதம் எந்த கணித மேதைக்கும் இல்லாதது!"என்கிறார். “அவரின் கணித முடிவுகள் ஆய்லர், ஜகோபி போன்ற கணித மாமேதைகளுக்கு இணையாக ஒப்பிடும் தரத்தில் இருந்தது" என்றும் ஹார்டி கூறியுள்ளார்.
ராமானுஜன் காசநோயால் முப்பத்தி மூன்று வயதில் மரணம் அடைந்தார். அப்பொழுது அவருக்கு நிகழ்ந்தது பெருங்கொடுமை. கடல் கடந்து போனதற்காக அவரை சாதி விலக்கு செய்திருந்தார்கள். அவர் மரணத்தின்பொழுது இறுதிச் சடங்குகளைச் செய்ய மறுத்தார்கள். அன்றைய ஹிந்து இதழ் ஆசிரியரின் முயற்சியால் ஒருவர் சடங்கு செய்ய முன்வந்தார். மொத்தமாகவே ஆறேழு பேர்தான் சுடுகாடு வரை சென்றார்கள். காலங்கள் கடந்தாலும் மேதைகளுக்கு இதுதான் நிலைமை போலும்.
ஆங்கிலத்தில் தேறாமல் இந்தியாவை விட்டு கிளம்பி தன் அறிவு வெளிச்சத்தால் கணித உலகின் துருவ நட்சத்திரமாக திகழும் ராமானுஜத்தின் நினைவு நாள் ஏப்.26.